நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாசிரியம்
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது
கலிவிருத்தம்
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,
ஆசிரியப்பா வதனால் அருமறைநூல் விரித்தானை,
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வ குளத்தாரானை,
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே.
திருவாசிரியம்
ஆசிரியப்பா
2578
செக்கர் முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு,
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்,
திகழ்பசுஞ் சோதி மரதகக் குன்றம்,
கடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா,
மேதகு பல்கலன் அணிந்து, சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப,
நச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி,
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து,
சிவனய னிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த,
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக,
மூவுல களந்த சேவடி யோயே!#
1
2579
உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல்
சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா
ருயிருருகி யுக்க,நேரிய காதல்
அன்பி லின்பீன் தேறல்,அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றி னொடுநல் வீடு பெறினும்,
கொள்வ தெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
2
2580
குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை,
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து,
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத்
தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே?
3
2581
ஊழிதோ றூழி ஓவாது, வாழிய!
என்று யாம்தொழ இசையுங் கொல்லோ,
யாவகை யுலகமும் யாவரு மில்லா,
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈ.ன்று, முக்கண் நுதலி,மூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே?
4
2582
மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி
மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்,இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன,
கற்பகக் காவு பற்பல வன்ன,
முடிதோ ளாயிரம் தழைத்த,
நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே?
5
2583
ஓஓ!உலகின தியல்வே, ஈ.ன்றோ ளிருக்க
மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்
கடவுள் நிற்ப, புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது
புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை யின்பு துன்பளி,
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா,
பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.
6
2584
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்,
தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட,
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்,
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து,ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது,
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே?#
7
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com